சென்னையில் இருந்து 1070 கி.மீ தூரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் சின்னம் நிலைக்கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் நோக்கி வரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போது புயல் சின்னம் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், அது காரைக்காலில் இருந்து 920 கிமீ தொலைவிலும், சென்னையிலிருந்து 1070 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
