தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான நகர்வுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் நீலாங்கரை இல்லத்தில் இன்று மிக முக்கியமான ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்க காவல்துறையின் உயர்மட்ட அதிகாரிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.
குறிப்பாக, காவல்துறையின் கோர்செல் (Core Cell) டிஐஜி தர்மராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நீலாங்கரை இல்லத்திற்கு வந்து விஜய்யைச் சந்தித்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்குச் செல்லும் போது வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு, பனையூர் தலைமை அலுவலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை வரையிலான போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறவுள்ள இடத்திற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, விஜய் பனையூர் அலுவலகம் சென்றுவிட்டு, அங்கிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
