சென்னை இராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும்; கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்தும், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தினை ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ சுகுமாரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏ கே.சி.வீரமணியும் கலந்து கொள்ளவில்லை.
இராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக ஆற்காடு தொகுதி எம்எல்ஏ S.M சுகுமார் இருந்து வந்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் போர்க்கொடி தூக்கிய நிலையில் சுகுமார் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
சுகுமாருக்கு பதில் சுமைதாங்கி ஏழுமலை என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள்
எம்.எல்.ஏ.ரவி இருந்தார். அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டநிலையில் அவருக்கு பதில் லோகநாதன் என்பவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு புதிய மாவட்ட செயலாளர்களும் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற ஆலோசனை கட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதே போல் திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சரும், ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான கே.சி வீரமணி இருந்து வந்தார்.
அவருடைய மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்ட நிலையில், வீரமணிக்கு பதிலாக டாக்டர் பசுபதி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக எம்எல்ஏ S.M சுகுமாருக்கு கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவியும், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பதவிக்கு பதிலாக எம்எல்ஏ கே.சி வீரமணிக்கு அமைப்பு செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால் அந்த பதவிகளை ஏற்க முடியாது என இருவரும் மறுத்துவிட்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மத்தியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். கவர்ச்சியை நம்பி மக்கள் வாக்களித்து விட்டனர். இந்த ஆட்சி ஐந்தாண்டுகள் நீடிக்காது.
உள்ளாட்சியை நல்லாட்சி என்பார்கள். உள்ளாட்சித் தேர்தலில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும். நேர்மையாக விசுவாசமாக இருப்பவர்களுக்கு மட்டும் சீட் கொடுங்கள். பரிந்துரை செய்யுங்கள். இந்த உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற்றால் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து விடும்.
