தமிழக அரசு பைக் டாக்சி சேவைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கும் வரை, ராபிடோ, ஓலா, உபர் உள்ளிட்ட செயலி அடிப்படையிலான பைக் டாக்சிகளை இயக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர். நவீன்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செயலி மூலம் இயங்கும் பைக் டாக்சி சேவைகள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் பகுதிநேர வேலை தேடும் இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் பயண வசதியையும் வாழ்வாதாரத்தையும் வழங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், தெளிவான விதிமுறைகள் இல்லாததால் காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வரை அபராதம் விதித்து வாகனங்களைப் பறிமுதல் செய்வதாகவும், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி மாநில அரசு விரைவில் கட்டுப்பாட்டு விதிகளை வகுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் ஆர். சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், பைக் டாக்சி சேவைகளை ஒழுங்குபடுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை, நிதித் துறை மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) பிரதிநிதிகள் அடங்கிய நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் அரசு முழுமையான கொள்கை முடிவை எடுக்க வேண்டியிருப்பதால், அதுவரை தமிழகத்தில் பைக் டாக்சிகளுக்கு எந்தவித அனுமதியும் இல்லை என்றும், விதிமீறி சேவையை இயக்குபவர்கள் மீது அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை தொடரும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், பைக் டாக்சிகளுக்கு தற்போது அனுமதி இல்லையெனில், அதை பொதுமக்களுக்கு தெளிவாக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், பைக் டாக்சிகளில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டால் பொறுப்பேற்பவர் யார் என்பது குறித்தும் அரசு விரைந்து தெளிவான கொள்கை வகுக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர்.
