தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான சூழலில் பெரும் திருப்பமாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கத் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன. இன்று சென்னையில் நடைபெற்ற அந்தந்தக் கட்சிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு, மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளின் நலன் கருதி இந்த முடிவை எடுத்துள்ளன.
நிலையான மக்களுக்கான ஆட்சி தொடர்வதற்கான நிபந்தனையற்ற ஆதரவை நாங்கள் தவெகவிற்கு அளிக்கிறோம் என்று சிபிஎம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட்டை தொடர்ந்து 2 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள சிபிஎம்-யும் தனது ஆதரவு தெரிவித்துள்ளதால், தவெகவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தவெகவிற்கு தேவைப்படுகிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. இருப்பினும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்து தனது முடிவு இருக்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். அந்தவகையில் தவெகவிற்கு விசிக-வின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க திருமாவளவனும் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்த அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஆளுநரைச் சந்திக்கும் விஜய், தங்களுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளின் பட்டியலைச் சமர்ப்பித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
