பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் எனக் கூறி, அனுமதிகளை பெற்றுத்தருவதாக தனியார் பள்ளிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகியின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாகக் கூறி, தமிழகம் முழுவதும் பல தனியார் பள்ளி நிர்வாகிகளிடமிருந்து நூறு கோடி ரூபாய் வரை வசூலித்து மோசடி செய்ததாக, தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்க பொருளாளர் முத்துக்குமார், முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில், முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தனக்கு நெருக்கமானவர் எனக் கூறி, இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி சம்பந்தமாக 47 பள்ளிகளின் நிர்வாகிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆயிரம் பள்ளிகளிடம், நூறு கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப் பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.
ஆனால், மனுதாரருக்கு முன்னாள் அமைச்சருடனோ, அரசுடனோ எந்த தொடர்பும் இல்லை. அதனால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்து, முத்துகுமாரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
தனியார் பள்ளிகளிடம் 100 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் இதுவரை 47 தனியார் பள்ளிகளிடம் இருந்து புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக இந்தப் பண பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் 47 பள்ளிகள் கொடுத்த புகாரில் இதுவரை 7 கோடிக்கு மேல் ஏமாந்தது தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்..
இந்த மோசடியின் முக்கிய நபராக பார்க்கக்கூடிய திமுக பிரமுகரும், தனியார் பள்ளிகள் சங்க பொருளாளருமான முத்துக்குமாரை தேடிவரும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஏற்கனவே இந்த மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதோடு, மோசடி செய்யப்பட்ட பணத்தில் எங்கெல்லாம் சொத்துக்களை குவித்துள்ளார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல் மீதமுள்ள ஏமாந்தவர்களின் பட்டியலை திரட்டும் பணியிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மும்முரம் காட்டி வருகின்றனர்.
