திண்டிவனத்தில் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அழைப்பின்றி பங்கேற்ற சி.வி. சண்முகம் ஆதரவாளர்களை அனுமதிக்க மறுத்ததால், அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில், நகர செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு திண்டிவனம் நகர நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருமண மண்டபம் எதிரே சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் மற்றும் திண்டிவனம் நகர நிர்வாகிகள் திரண்டனர். மண்டபத்திற்குள் செல்ல முற்பட்டபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, “நாங்களும் அதிமுகவில் தான் உள்ளோம். நகரத்தில் பல்வேறு பதவிகளில் இருக்கிறோம். எங்களையும் மண்டபத்திற்குள் அனுமதிக்க வேண்டும்” என சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்ட செயலாளர் தரப்புக்கும், சி.வி. சண்முகம் ஆதரவாளர்களுக்கும் இடையே நிலவும் கோஷ்டி பூசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் திண்டிவனம் பகுதியில் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
