70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எனக்கூறியுள்ள அமைச்சர் நிர்மல்குமார், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைத்தவுடன் விரைவில் தூர்வாரும் பணி தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆய்வு மேற்கொண்டார் .
கோடை வெப்பத்தால் வைகை அணையின் நீர்மட்டம் கடுமையாக சரிந்து 20 அடி வரை சென்ற நிலையில் அணையில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்
இதனைத் தொடர்ந்து வைகை அணை பகுதியில் அமைச்சர் நிர்மல் குமார் மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதனுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் , வைகை அணையில் தூர்வாரும் பணிகள் குறித்து தற்போது வரை ஆய்வு நடத்திக் கொண்டு வருகிறோம். இதற்காக மத்திய அரசிடம் ஒப்புதலை கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் தூர்வாரும் பணிகள் துவங்கப்படும் என்றார்.
எத்தனை வருடங்களில் தூர்வாரும் நடத்தி முடிக்கப்படும் என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம், மூன்று கட்டங்களாக தூர்வாரும் பணிகள் மேற்கொண்டால் கூட முடிவு பெற 9 வருடம் ஆகும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் அதற்கு முன்பாக பணிகளை முடிப்பதற்கு திட்டமிட கூறியிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

வைகை அணையில் நிறைந்துள்ள மணல் திட்டுகளால் 20% நீர் தேக்க முடியாத சூழல் தற்போது உள்ளது. அதை நிவர்த்தி செய்யும் பணிகளை மேற்கொள்ள உள்ளோம். 70 ஆண்டுகளாக வைகை அணையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் நிர்மல்குமார்,
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை எனக் கூறினார். விவசாயிகள் அல்லாத தனிநபர்கள் வண்டல் மண் எடுப்பது குறித்து அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவதாகவும், அது குறித்து தகவல் கிடைத்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேகமலை வனப்பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக வசித்து வரும் மலைவாழ் மக்களை வனத்துறை வெளியேற்றுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் இயற்கை வளங்களை தொந்தரவு செய்யாமல் மலைவாழ் மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்தில் வசிக்கலாம். அதே போல் இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
