சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி மற்றும் விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி, திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள தலித் மக்கள் இந்த முறை தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்து உள்ளனர்.
அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக யாராக இருந்தாலும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தைத்தான் தான் ஆட்சியில் அமர வேண்டும் என தீர்மானித்து விட்டார்கள் எனத் தெரிவித்த அவர், அரசியல் அராஜகத்தை திமுகவும் அதிமுகவும் தொடர்ச்சியாக செய்து வந்தார்கள் அதற்கு தற்பொழுது முடிவு கட்டப்பட்டுள்ளது என கூறினார்.
தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் எட்டு தலித் சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து ஒரு அற்புதத்தை முதலமைச்சர் ஏற்படுத்தியுள்ளார் எனக் கூறிய பொன்னுசாமி,
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முறையாக பரப்பரை செய்யவில்லை. ஆனாலும் சின்னமும் தலைவர் விஜயின் முகமும் வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது என்றார்.
திருமாவளவன் முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார். திமுகவை சேர்ந்த 4 பேரை கேட்டு முடிவெடுக்கும் நிலையில் அவர் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தலைவராக தனியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். முதலமைச்சருக்கு திருமாவளவன் உதவியாக இருக்க வேண்டும் எனக் கூறிய பொன்னுசாமி, திமுக தற்போது அமைந்திருக்கும் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்காமல் அமைதியாக கவனிக்க வேண்டும் என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய குடந்தை அரசன், 2026 சட்டமன்ற தேர்தலின் போது தமிழக வெற்றிக் கழகத்திற்கு நாங்கள் ஆதரவு அளித்தை, கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அதிகாரத்தில் வருவார்கள் என் எங்களுக்கு அன்றே தெரியும் என்றார்.
தமிழக வெற்றி கழகம் இப்போதுதான் ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். குழந்தை இப்போதுதான் பிறந்திருக்கிறது. அது எழுந்து நடக்க வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் விமர்சனம் செய்வது ஏற்புடையது அல்ல. நிச்சயமாக தமிழக வெற்றி கழகம் தமிழகத்திற்கு நல்லது செய்வார்கள். விஜய் சிறந்த ஆட்சியை நிச்சயம் கொடுப்பார் என்றார்.
