கிருஷ்ணகிரி அருகே மதுபாட்டிலுக்குப் பணம் குறைவாகக் கொடுத்ததைக் கண்டித்ததால், ஆத்திரமடைந்த 2 இளைஞர்கள் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அடுத்த பாஞ்சாலியூர் கிராமத்தில் அரசு டாஸ்மாக் கடை (கடை எண்: 2150) இயங்கி வருகிறது. இக்கடையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னசாமி (50) விற்பனையாளராகவும், கிருஷ்ணகிரி ராஜாஜி நகரைச் சேர்ந்த பிரகாஷ் (58) விற்பனை உதவியாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மேல்சோமார்பேட்டையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சத்தியமூர்த்தி (27) மற்றும் லைன்கொல்லையைச் சேர்ந்த திருமால் என்ற நித்தீஷ்குமார் (25) ஆகிய இரு இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளனர். அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 30 ரூபாய் குறைவாகக் கொடுத்து 2 பீர் பாட்டில்களை வாங்கியதாக தெரிகிறது. மீதிப் பணத்தை அடுத்த முறை தருவதாகக் கூறிவிட்டுச் சென்றனர்.

சற்று நேரம் கழித்து மீண்டும் போதையில் வந்த அவர்கள், இந்த முறை 40 ரூபாய் குறைவாகக் கொடுத்து மற்றொரு பீர் பாட்டில் கேட்டுள்ளனர். ஏற்கனவே பணம் குறைவாகக் கொடுத்ததை ஊழியர்கள் சுட்டிக்காட்டிக் கண்டித்த போதிலும், அவர்களுக்கு பீர் பாட்டிலை வழங்கியதாக தெரிகிறது.

இருப்பினும், ஊழியர்கள் தங்களைக் கண்டித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், தங்களது இருசக்கர வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து காலி பீர் பாட்டிலில் நிரப்பி, அதில் துணியைத் திணித்து, தீப்பற்ற வைத்து டாஸ்மாக் கடைக்குள் வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்தத் திடீர் தாக்குதலில், கடையில் பணியில் இருந்த விற்பனை உதவியாளர் பிரகாசின் இடது நெற்றி, இடது கன்னம் மற்றும் இடது தோள்பட்டை ஆகிய இடங்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்றவர்கள், தப்பியோட முயன்ற 2 இளைஞர்களையும் மடக்கிப் பிடித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரையும் கைது செய்தனர். தீக்காயமடைந்த பிரகாஷ் மீட்கப்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version