சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரிய (TNEB) தலைமையகத்திலிருந்து நிலக்கரி கொள்முதல், டெண்டர்கள் மற்றும் முக்கியத் திட்டங்களின் ஆவணங்கள் அடங்கிய 18 கணினி ஹார்ட் டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரம், தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மே 16-17 வார இறுதி நாட்களில் இந்தச் சதி அரங்கேறியுள்ள நிலையில், இது குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது எக்ஸ் (X) தளத்தில் தற்போதைய தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
யாரைக் காப்பாற்ற இந்தச் சதி?
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், மின்துறை தலைமை அலுவலகத்தில் மிக முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“தங்களைத் தூயசக்தி என்று மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்சியில், டெண்டர் தொடர்பான முக்கியத் தரவுகள் இவ்வாறு காணாமல் போயிருப்பதை நாம் என்னவென்று எடுத்துக் கொள்ள வேண்டும்?” என அவர் வினா எழுப்பியுள்ளார்.
மேலும், “நடு இரவில் திருடர்கள் வந்து திருடிச் செல்வதற்கு இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா?” என்று சாடியுள்ள அவர், கண்டிப்பாக இந்தத் திருட்டிற்குப் பின்னால் ஒரு பெரும் உள்நோக்கமும், யாரையோ காப்பாற்றும் சதியும் மறைந்திருக்கிறது என்பது மட்டும் உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
“அன்று தூரசக்தி, ஓரசக்தி என்று மேடைகளில் முழங்கிய முந்தைய ஆளுங்கட்சியைக் காப்பாற்றத்தான் தற்போது இந்த ‘பேரசக்தி’ முயல்கிறதா?” என்றும் அவர் அடுக்கடுக்கான அரசியல் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர உடனடியாக முறையான சிபிஐ (CBI) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
